பி ஏ பி வாய்க்காலுக்குள் கார் பாய்ந்து 7 பேர் காயம்
மங்கலம் அருகே பி ஏ பி வாய்க்காலுக்குள் கார் பாய்ந்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.
மங்கலம்
மங்கலம் அருகே பி ஏ பி வாய்க்காலுக்குள் கார் பாய்ந்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.
இது பற்றிய விவரம் வருமாறு
கோவிலுக்கு சென்றனர்
திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் வயது 59. இவருடைய மனைவி கல்பனா 55. மகன் அருண் 28. அருணின் மனைவி சுஜாதா 26. சேகரின் மகள் சரண்யா 29. மற்றும் ஹரிஹரசுதன் 2 பிரணிதா 4 ஆகிய 2 குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் நேற்று மங்கலம் அருகே உள்ள அய்யன்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றனர்.
பின்னர் சாமி தரிசனம் முடிந்து திருப்பூர் செல்லும் போது மங்கலத்தை அடுத்த கிடாதுறை பகுதியில் இருந்து நடுவேலம்பாளையம் செல்லும் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.
வாய்க்காலில் கார் பாய்ந்தது
கிடாதுறை பகுதியில் உள்ள பி ஏ பி வாய்க்கால் அருகே கார் சென்ற போது திடீரென்று நிலைதடுமாறிய கார் எதிர்பாராதவிதமாக பி ஏ பி வாய்க்காலுக்குள் பாய்ந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அய்யோ அம்மா என அலறினார்கள்.
பின்னர் அந்த வழியாக சென்றர்கள் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரில் இருந்தவர்களை காரில் இருந்து வெளியே பத்திரமாக மீட்டனர்.
7 பேர் காயம்
இந்த விபத்தில் காரில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 7 பேரும் காயமடைந்தனர். பின்னர் மங்கலம் போலீசார் 7 பேரைஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் மூலம் கார் மேலே கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவி்த்தனர்.