ஈரோட்டில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.98 ஆயிரம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

ஈரோட்டில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.98 ஆயிரத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-03-22 21:56 GMT
ஈரோட்டில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.98 ஆயிரத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
வாகன தணிக்கை
சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி தேர்தல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஈரோடு திண்டல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவரிடம் ரூ.98 ஆயிரத்து 850 இருந்ததும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாததும் தெரியவந்தது.
ரூ.98 ஆயிரம் பறிமுதல்
பணத்தை கொண்டு வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் திண்டல் மாருதி நகரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 33) என்பதும், நிதி நிறுவன தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.98 ஆயிரத்து 850-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த பணத்தை ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆர்.டி.ஓ. சைபுதீனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அந்த பணத்தை வாங்கி சரிபார்த்த அவர், அரசு கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும், பணத்துக்கான உரிய ஆவணங்களை காண்பித்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்