ஈரோட்டில் வாகன சோதனையில் 530 பவுன் நகை பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
ஈரோட்டில் வாகன சோதனையின்போது 530 பவுன் நகையை பறிமுதல் செய்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோட்டில் வாகன சோதனையின்போது 530 பவுன் நகையை பறிமுதல் செய்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
530 பவுன் நகை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதையும், பரிசு பொருட்கள் வினியோகத்தையும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழுவை சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் ஈரோடு மேற்கு தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கரூர்ரோட்டில் இருந்து ஈரோடு நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த காரில் 530 பவுன் நகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நிதி நிறுவனம்
இதைத்தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்பதும், பல்வேறு கிளைகளில் இருந்து நகைகளை வாங்கி ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. ஆனால் நகைக்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதைத்தொடர்ந்து 530 பவுன் நகையையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நகையை ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீனிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்தால் நகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.