பழங்கால நடுக்கல், வீரக்கல் புகைப்பட கண்காட்சி
பழங்கால நடுக்கல், வீரக்கல் புகைப்பட கண்காட்சி நடந்தது;
மதுரை
மதுரை பாத்திமா கல்லூரி பொன் விழா அரங்கில் வரலாற்று துறை மற்றும் தமிழ்த்துறை மற்றும் மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பில் பழங்கால நடுக்கல், வீரக்கல் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் நடுகற்கள் அடங்கிய தகவல் படம் வைக்கப்பட்டிருந்தது. பாத்திமா கல்லூரியின் செயலர் பிரான்சிஸ்கா புளோரா, முதல்வர் செலின் சகாய மேரி, மதுரை அரசு அருங்காட்சியகக் காப்பாளர் மருதுபாண்டியன் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் அருங்காட்சியக காப்பாளர் மருது பாண்டியன் கண்காட்சியில் இடம் பெற்ற நடுகற்களின் வகைகள், அவை பெரும்பான்மையாக கிடைக்கப்பெறும் இடங்கள், காலக்கணிப்பு முறைகள் மற்றும் நடுகற்களின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி பேசினார். இந்த கண்காட்சியில் பழமையான மற்றும் அரிதான நடுகற்கள் மற்றும் வீரக்கற்கள், கல்வெட்டுகள், கோழியைத் தெய்வமாக வழிபட்ட கோழி நடுகல், பெண் தெய்வமாக வழிபடப்பட்ட கொற்றவையின் நடுகல் முதலியவை இடம் பெற்றன. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள கொங்கு மண்டலத்தின் முல்லை நிலப்பகுதியில் அதிகமாக கிடைக்கப்பெற்ற நடுகற்களின் மாதிரிகள் படங்களாகப் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியை கல்லூரியின் அனைத்துத்துறை ஆசிரியர்களும், மாணவிகளும் பார்வையிட்டு குறிப்பு எடுத்து கொண்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.