குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

நெல்லை மேலப்பாளையத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-22 20:31 GMT
நெல்லை, மார்ச்:
மேலப்பாளையத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினை

நெல்லை மேலப்பாளையம் 37-வது வார்டுக்கு உட்பட்ட குண்டு தெரு மற்றும் அதை சுற்றி உள்ள தெருக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்கவில்லை.
அவ்வப்போது கிடைக்கும் குடிநீரும் கழிவுநீர் கலந்த நிலையில் வருகிறது. இதுதொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

திடீர் போராட்டம்

இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மதியம் அங்குள்ள மெயின் ரோட்டில் திரண்டனர். ரோட்டில் காலிக்குடங்களை வைத்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் புகாரி சேட் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி அதிகாரிகள் மூலம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்