நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் துணை ராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் துணை ராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
நெல்லை, மார்ச்:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் துணை ராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
துணை ராணுவம்
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. நெல்லை பகுதியில் 80 துணை ராணுவ வீரர்கள், போலீசாருடன் இணைந்து ரோந்து, கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
அதன்படி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் நேற்று துணை ராணுவ வீரர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. காலை, மாலை என மொத்தம் 40 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இன்றும் (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.