ஐஸ் வியாபாரியிடம் பணம் திருடிய 2 பேர் கைது
வள்ளியூர் அருகே ஐஸ் வியாபாரியிடம் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வள்ளியூர், மார்ச்:
வள்ளியூர் அருகே உள்ள மைலாப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்தன் (வயது 70). ஐஸ் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் வள்ளியூர் பகுதிகளில் ஐஸ் வியாபாரம் செய்துவிட்டு வள்ளியூர் தெப்பக்குளம் அருகே சாலையோரத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு தெப்பக்குளத்தில் கை, கால்கள் கழுவ சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது சைக்கிளில் தொங்க விட்டிருந்த பணப்பையை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணப்பையை திருடி சென்றது ராதாபுரம் சமத்துவபுரத்தை சேர்ந்த குமார் (26), ஆனந்த் (20) ஆகியோர் என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் 2 பேரையும் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.