வங்கிக்கு எடுத்து செல்லப்பட்ட ரூ.30 லட்சம் பறிமுதல்

புதுக்கோட்டையில் உரிய ஆவணம் இன்றி வங்கிக்கு எடுத்து செல்லப்பட்ட ரூ.30 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-22 19:46 GMT
புதுக்கோட்டை, மார்ச்.23-
புதுக்கோட்டையில்  உரிய ஆவணம் இன்றி வங்கிக்கு எடுத்து செல்லப்பட்ட ரூ.30 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் அளவுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படையினர் திருவப்பூர் பகுதியில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ரூ.30 லட்சம் பறிமுதல்
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தன. அந்த பணம் சிட்டி யூனியன் வங்கி புதுக்கோட்டை கிளையில் இருந்து காரையூர் கிளைக்கு கொண்டு செல்லப்படுவதாக காரில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான உரிய ஆவணம் இல்லை என்றதால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் ரூ.30 லட்ச ம் இருந்தது.
வருமானவரித்துறை
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி டெய்சிகுமாரிடம் ஒப்படைத்தனர். அந்த பணத்தை அதிகாரிகள் எண்ணி, வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். வங்கி தரப்பில் இருந்தும் ஊழியர்கள் வந்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணம் காட்டிய பின் திரும்ப பெற்று செல்லும்படி தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்