ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்யும்படி இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
அறிவுரைகள்
அதன் அடிப்படையில் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம், எந்திரங்களை எடுத்து வாக்கு எண்ணுதற்கு ஏதுவாக போடப்படும் மேஜைகள்,
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறைகள், வாக்கு எண்ணும் மையத்திற்கு வருவதற்கு ஏற்படுத்தப்படும் சாலை வசதிகள், 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறையில் ஏற்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டது. அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணும் நாளில் அலுவலர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, கூடலூர் ஜென்மம் நிலம் வருவாய் அலுவலர் கீர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.