சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு ஆவணங்கள் அனுப்பும் பணி தீவிரம்

கோவையில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு ஆவணங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2021-03-22 18:56 GMT
கோவை,

கோவையில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு ஆவணங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

10 சட்டமன்ற தொகுதிகள் 

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு, சூலூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, தொண்டாமுத்தூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

 இந்த சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மொத்தம் 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இந்த வாக்குச்சாவடிகளில் மின்வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வெயில் காலம் என்பதால் வாக்காளர்கள் வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க வாக்குச்சாவடி முன் பந்தல் போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆவணங்கள் அனுப்பும் பணி 

இந்த வாக்குப்பதிவுக்கு தேவையான விண்ணப்ப படிவம், தபால் உறைகள் உள்ளிட்ட ஆவணங்கள் லாரி மூலம் கடந்த சில நாட்களுக்கு முன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

இந்த ஆவணங்கள் 10 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரிக்கப்பட்டது.
பின்னர் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான ஆவணங்கள் அனுப்பும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனா அச்சம் காரணமாக சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் தேர்தல் ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பு கவச ஆடைகள், கிருமி நாசினி, கண் கண்ணாடி, தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன. 

அதனைத்தொடர்ந்து தற்போது தொகுதி வாரியாக வாக்குச்சாவடி களுக்கு தேவையான ஆவணங்கள், வாக்குப்பதிவு எந்திரங்களை சீல் வைக்க தேவையான பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்