வேனில் கொண்டு வரப்பட்ட ரூ 1 கோடி பறிமுதல்

கோவையில் வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-03-22 18:55 GMT
கோவை,

வங்கி ஏ.டி.எம்.களில் நிரப்ப பணம் கொண்டு செல்லும்போது ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்வது தெரியவந்து உள்ளது. இந்த நிலையில் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படையினர் திருச்சி சாலையில் குளத்தேரி அருகே வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப பணம் கொண்டு செல்லும் வாகனம் வந்தது. உடனே அதிகாரிகள் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. 

ரூ.1 கோடி பறிமுதல் 

இதுகுறித்து பணத்தை எடுத்து சென்றவர்களிடம் கேட்டதற்கு வங்கி ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக பணம் கொண்டு செல்வதாக கூறப்பட்டது. ஆனால் அதை பறக்கும் படையினர் ஏற்றுக் கொள்ளவில்லை. 

இதைத் தொடர்ந்து அந்த வேன் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து வேனில் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது. ஆவணங்கள் இன்றி ரூ.1 கோடியே 3 லட்சம் பறிமுதல் செய்தது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாக்காளர்களுக்கு வினியோகிக்க கொண்டு செல்லப்பட்டதா?

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் வங்கி பணியாளர்கள் மற்றும் தனியார் காண்டிராக்ட் (அவுட் சோர்சிங்) மூலம் பணம் நிரப்பப் படுகிறது. ஆனால் எந்த வங்கி ஏ.டி.எம்.மில் எவ்வளவு பணம் நிரப்ப வேண்டும் என்ற கணக்கு உள்ளது.

 மேலும் பணம் கொண்டு செல்லும் வாகனத்தின் பதிவு எண், பணியாளர் பெயர், அதற்கான ஆவணங்கள் உள்பட பல்வேறு விவரங்கள் இருக்க வேண்டும். 

ஆனால் அந்த விவரங்கள் இல்லாமல் பாதுகாப்பு அறையில் இருந்து பணத்தை வெளியே எடுத்துச் செல்ல முடியாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பறக்கும் படையினர் ஒரு வேனில் நடத்திய சோதனையில் ரூ.2 கோடியே 11 லட்சம் பணம் இருந்தது. ஆனால் அதில் ரூ.1 கோடியே 98 லட்சத்தை தான் ஏ.டி.எம்.மில் நிரப்ப கணக்கு இருந்தது. 

வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை

மீதி ரூ.13 லட்சத்துக்கு கணக்கு இல்லாததால் அந்த 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல ரூ.1 கோடியே 3 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டு உள்ளது. 

அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? இல்லையா? அப்படி ஆவணங்கள் இருந்திருந்தால் அது இல்லாமல் தனியார் நிறுவனத்தினர் பணத்தை எப்படி வெளியே கொண்டு சென்றார்கள் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

அதன் முடிவில் தான் அது வாக்காளர்களுக்கு வினியோகிக்க கொண்டு செல்லப்பட்டதா? என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்