பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் ஆவணங்கள் இல்லாததால் ரூ.4½ லட்சம் பறிமுதல்
பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் ஆவணங்கள் இல்லாததால் ரூ.4½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி,
வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட தமிழக-கேரள எல்லையான மீனாட்சிபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வாகனத்தில் ரூ.55 ஆயிரத்து 920 இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் சரக்கு வாகனத்தில் வந்தவர் சுப்பேகவுண்டன்புதூரை சேர்ந்த வசந்தகுமார் என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். இதே பறக்கும் படையினர் செமனாம்பதி சோதனை சாவடி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் காரில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் ஆவணங்களின்றி ரூ.86 ஆயிரத்து 900 இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வளந்தாயமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி விசாரணை நடத்தியதில் கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பதும்,
ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமியிடம் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி தொகுதி
பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட சூலக்கல் பிரிவில் வேளாண்மை துறை உதவி பொறியாளர் ராஜீவ்காந்தி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, காரில் ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 420 இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் நடுப்புணியை சேர்ந்த சதாம்உசேன் என்பதும், ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம் ஒப்படைத்தனர். பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் ஒரே நாளில் ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 220 பறிமுதல் செய்யப்பட்டது.