விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 102 வேட்பாளர்கள் போட்டி

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Update: 2021-03-22 17:40 GMT
விழுப்புரம், 

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2-ந் தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற்றது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 36 பேரும், செஞ்சி தொகுதியில் 32 பேரும், மயிலம் தொகுதியில் 25 பேரும், திண்டிவனம் (தனி) தொகுதியில் 31 பேரும், வானூர் (தனி) தொகுதியில் 13 பேரும், விக்கிரவாண்டி தொகுதியில் 30 பேரும், திருக்கோவிலூர் தொகுதியில் 28 பேரும் ஆக மொத்தம் 195 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 20-ந் தேதி நடைபெற்றது. இதில் செஞ்சி தொகுதியில் 14 பேரின் மனுக்களும், மயிலம் தொகுதியில் 14 பேரின் மனுக்களும், திண்டிவனம் தொகுதியில் 15 பேரின் மனுக்களும், வானூர் தொகுதியில் 8 பேரின் மனுக்களும், விழுப்புரம் தொகுதியில் 25 பேரின் மனுக்களும், விக்கிரவாண்டி தொகுதியில் 14 பேரின் மனுக்களும், திருக்கோவிலூர் தொகுதியில் 15 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன. 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 90 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

102 வேட்பாளர்கள் போட்டி

இந்நிலையில் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு நேற்று கடைசி நாள் என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி செஞ்சி தொகுதியில் ஒருவரும், வானூர் தொகுதியில் ஒருவரும், திருக்கோவிலூர் தொகுதியில் ஒருவரும் என 3 பேர் மட்டுமே தாங்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர். மயிலம், திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் யாரும் வேட்பு மனுவை திரும்ப பெறவில்லை.

இதன் அடிப்படையில் தற்போது செஞ்சி தொகுதியில் 13 வேட்பாளர்களும், மயிலம் தொகுதியில் 14 வேட்பாளர்களும், திண்டிவனம் தொகுதியில் 15 வேட்பாளர்களும், வானூர் தொகுதியில் 7 வேட்பாளர்களும், விழுப்புரம் தொகுதியில் 25 வேட்பாளர்களும், விக்கிரவாண்டி தொகுதியில் 14 வேட்பாளர்களும், திருக்கோவிலூர் தொகுதியில் 14 வேட்பாளர்களும் ஆக மொத்தம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 102 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்