விழுப்புரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தவர் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது அலிஜின்னா (வயது 55). இவர் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 20-ந் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையின்போது இவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை விழுப்புரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகமான கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த முகமது அலிஜின்னா, அங்குள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி ஹரிதாசிடம் சென்று தன்னுடைய வேட்பு மனுவை தள்ளுபடி செய்தது குறித்து கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறையை விட்டு வெளியே வந்த முகமதுஅலி ஜின்னா தான் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். பின்னர் அவரிடம், இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அவரை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி ஹரிதாசிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 10 பேர் முன்மொழிதல் வேண்டும். அவருடைய வேட்பு மனுவில் 10 பேரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவர்களில் 8 பேரிடம் மட்டும் கையொப்பத்தை வாங்கியுள்ளார். வேட்புமனு பரிசீலனையின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் இந்த காரணத்தை எடுத்துக்கூறி தான் முகமது அலிஜின்னாவின் மனுவை தள்ளுபடி செய்தோம். இதுபற்றி அவரிடம் தெளிவாக எடுத்துக்கூறியும் அவருக்கு புரிதல் இல்லை
என்றார். இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.