கட்டிட பணியின்போது 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
கட்டிட பணியின்போது 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த சி.ஜி.என்.கண்டிகையை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 40). கட்டிடத்தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களாக பட்டாபிராம் அடுத்த ஆயில்சேரி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை அந்த கட்டிடத்தில் சுமார் 20 அடி உயரத்தில் நின்று கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த இளங்கோவன், திடீரென அங்கிருந்து நிலைதடுமாறி மாடி படியில் விழுந்து, அங்கிருந்து உருண்டு கீழே வந்து விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இளங்கோவன் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக பட்டாபிராம் போலீசார் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மேற்பார்வையாளர் பாலாஜி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.