தடுப்பணை மதகில் சிக்கி அரசு ஊழியர் பலி

பொள்ளாச்சி அருகே தேங்காய்களை எடுக்க சென்றபோது தடுப்பணை மதகில் சிக்கி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-03-22 10:11 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே தேங்காய்களை எடுக்க சென்றபோது தடுப்பணை மதகில் சிக்கி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

அரசு ஊழியர் 

பொள்ளாச்சி அருகே ஆழியாறு நகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 53). இவர் ஆழியார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில், கனகராஜ் கோட்டூரில் உள்ள மயிலாடுதுறை தடுப்பணைக்கு குளிக்க சென்றார். பின்னர் அந்த தடுப்பணையில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தார். 

தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேறிக்கொண்டு இருந்தது. 

தடுப்பணை ஷட்டரில் சிக்கினார் 

அப்போது தடுப்பணை பகுதியில் உள்ள தண்ணீரில் தேங்காய் கள் மிதந்து வந்தன. அதை சேகரித்து வீட்டிற்கு எடுத்துச்செல்ல முடிவு செய்தார். அதன்படி அந்த தேங்காய்களை அவர் சேகரித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்தப்பகுதியில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், திடீரென்று அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப் பட்டு தடுப்பணை ஷட்டரில் சிக்கினார். 

அதில் இருந்து தப்பித்து வெளியே வர முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இதையடுத்து அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 

 இது குறித்து தகவல் அறிந்த ஆழியார் போலீசார் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்