தஞ்சையில் 40 வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல்

தஞ்சையில் தி.மு.க. பிரமுகரிடம் இருந்து 40 வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-22 09:53 GMT
தஞ்சாவூர்:
தஞ்சையில் தி.மு.க. பிரமுகரிடம் இருந்து 40 வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பறக்கும்படையினர் சோதனை 
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தமாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும்படையினரும், நிலையான கண்காணிப்புக்குழுவினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தஞ்சை மேலவீதி மூல அனுமார் கோவில் பகுதியில் நேற்று பறக்கும்படை அலுவலர் சுமதி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஏட்டுகள் பிரபு, ரோஜாப்பூ ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்களில் வந்த இருவரை வழிமறித்து சோதனை செய்தனர்.
 பறிமுதல் 
அப்போது அவர்கள் தி.மு.க.வினர் என்பதும், அவர்களிடம் தி.மு.க. துண்டு பிரசுரங்களும், 40 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் வாக்காளர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் பறிமுதல் செய்த வாக்காளர் அட்டையை கொண்டு வந்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் கூறும்போது, தஞ்சை வடக்கு அலங்கம் கோட்டை பகுதியில் குடியிருந்த பலர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக வீடுகள் அகற்றப்பட உள்ளது. இதனால் அங்கு வசித்த பலரும் வெளியூர் மற்றும் பிள்ளையார்பட்டி பகுதிக்கு சென்றுவிட்டனர். இவர்களுக்கு பழைய முகவரியிலேயே வாக்காளர் அடையாள அட்டைகள் வந்துள்ளது.
விசாரணை 
இந்த அட்டைகளை அப்பகுதி வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் வினியோகம் செய்ய வழங்கப்பட்டது. ஆனால் அவர் கோட்டைப்பகுதியில் உள்ள தி.மு.க.,வினரிடம் மொத்தமாக கொடுத்து, வாக்காளர்களிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார். அந்த அடையாள அட்டைகள் தான் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
இதுகுறித்து கலெக்டர் கோவிந்தராவிடம் கேட்ட போது, வாக்காளர்களுக்கு நேரில் மட்டுமே அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். ஆனால் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அடையாள அட்டைகளை தனிப்பட்ட அரசியல் கட்சியிடம் ஒப்படைத்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்