என்னை வெற்றி பெற செய்யுங்கள்: மேலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுப்பேன் - அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்

என்னை வெற்றி பெற செய்யுங்கள், மேலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுப்பேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம் செய்தார்.

Update: 2021-03-22 08:18 GMT
விராலிமலை, 

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயபாஸ்கர் நேற்று பாட்னாபட்டி, இராஜாளிப்பட்டி, நம்பம்பட்டி, கவரப்பட்டி, செரளப்பட்டி, பூச்சிப்பட்டி, கோடாலிக்குடி, அத்திப்பள்ளம், வாணதிராயன்பட்டி, விராலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

 எந்த காலத்திலும், எல்லா பிரச்சினைகளுக்கும், எந்த அவசரத்திற்கும் இந்த விஜயபாஸ்கர் உங்களோடு இருப்பேன். ஊருக்கு வெளியே காவல் காக்கும் தெய்வமான கருப்பசாமி போல் உங்களை காக்க எல்லா காலங்களிலும் உங்கள் 
பிள்ளையான விஜயபாஸ்கர் இருப்பார். கொரோனா காலத்திலும், புயல் சேதத்திலும் எதிர்க்கட்சியாக இருந்த போதிலும், அனைவருக்கும் மருந்து, மாத்திரைகளை கொடுத்து அவர்களும் பயனடையும் வகையில் அனைவருக்கும் சமமானவனாக இருந்தது இந்த விஜயபாஸ்கர்.

காவிரி வைகை குண்டாறு திட்டம், வாஷிங் மெஷின், 6 சிலிண்டர்கள், மாதம் ரூ.1500, 100 நாள் வேலையை 150 நாட்களாக மாற்றி தற்போதுள்ள ரூ.230 சம்பளத்தை உயர்த்தி ரூ.300 ஆக கிடைக்கவும், உங்கள் பகுதிக்கு புதிய கால்நடை மருத்துவமனை, பஸ் வசதி, தரமான சாலைகள் கிடைக்கவும் இன்னும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு  இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் பிரசாரத்தின்போது கவரப்பட்டி கிராமத்தில் இரட்டை இலை சின்னத்தை வரைந்து பெண்கள் கும்மியடித்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்