10 அடி உயர பலாமரத்தில் காய்த்து தொங்கும் காய்கள்
பட்டிவீரன்பட்டி அருகே 10 அடி உயர பலாமரத்தில் காய்கள் காய்த்து தொங்குகின்றன.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாலைப்புதூரில் அருண்நாகராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது.
இங்கு 10 அடி உயரம் மட்டுமே கொண்ட அதிசய பலாமரம் உள்ளது. இதில் தற்போது காய்கள் காய்த்து தொங்குகின்றன.
இந்த மரம் பாலூர்-1 என்ற வகையை சேர்ந்ததாகும். நடவு செய்யப்பட்ட 2 ஆண்டுகளில் பலன் கொடுத்துள்ளது.
மலைப்பகுதிகளில் விளைய கூடிய பலாப்பழங்களை போல, இந்த மரத்திலிருந்து விளையும் பலாப்பழங்கள் சுவை மிகுந்ததாக உள்ளது. இந்த மரத்தில் 10 முதல் 20 காய்கள் வரை காய்க்கிறது. பொதுவாக மலைப்பகுதிகளில் சுமார் 30 முதல் 50 அடி உயரத்தில் உள்ள பலாமரங்களில் தான் காய்களை பார்க்க முடியும். மேலும் அவற்றில் இருந்து பலாக்காய்களை பறிப்பது கடினமான பணியாகும்.
இந்தநிலையில் 10 அடி உயரம் கொண்ட இந்த அதிசய பலா மரத்திலிருந்து பலாக்காய்களை தரையில் இருந்தே எளிதில் பறிக்கலாம். சாலைப்புதூர் வழியாக கொடைக்கானல், கேரளா மற்றும் வெளி மாநிலங்கள் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த அதிசய பலாமரத்தை தங்கள் செல்போனில் படம் பிடித்து செல்கின்றனர்.