கட்டையால் அடித்து ஒருவர் கொலை; சிறுவன் கைது
ஆத்திரமடைந்த சிறுவன் அங்கிருந்த கட்டையால் நாராயணனின் தலையில் பலமாக தாக்கினார்.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், பால்வாடி 3-வது தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 40). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது, அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் நாராயணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அங்கிருந்த கட்டையால் நாராயணனின் தலையில் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தநிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் 17 வயதுடைய சிறுவனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த நாராயணன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.