உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டது: சென்னையில் இதுவரை ரூ.11.78 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதாக சென்னையில் இதுவரை ரூ.11.78 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-18 06:16 GMT
சென்னை, 

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 24 மணிநேரமும் கண்காணிக்க 48 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 48 நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்

இந்தநிலையில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் நேற்று முன்தினம் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 11 கிலோ தங்கமும், 46 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டு மாம்பலம் கிண்டி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் கடந்த 27-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.84,14,203 ரொக்கமும், 24 கிலோ தங்கமும், 80 கிலோ வெள்ளியும், 1,175 கிலோ குட்கா மற்றும் 5,700 கிலோ ரேஷன் அரிசி இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள ரொக்கம் மற்றும் இதரப் பொருட்களின் மதிப்பு ரூ.11,77,49,062 ஆகும்.

மேற்கண்ட தகவல்கள் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆலந்தூர் தொகுதி பறக்கும் படை அதிகாரியான வேளாண்துறை அதிகாரி ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை அருகே சென்ற வேனை பிடித்து அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.8 லட்சத்து 36 ஆயிரம் 264 பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). முட்டை வியாபாரியான இவர், லோடு ஏற்றிக்கொண்டு காரம்பாக்கம் அருகே வந்தபோது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அந்த லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 950-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆவடி அடுத்த பருத்திப்பட்டு அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரியா தலைமையிலான போலீசார், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஆவடி அடுத்த வீராபுரம் நோக்கி சென்ற காரில் உரிய ஆவணமில்லாமல் இருந்த ரூ.53 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்