தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து காப்பீடு, வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது
தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து காப்பீடு நிறுவனம் மற்றும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் சென்னையில் தனித்தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களான நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகிய 4 நிறுவனங்களில் ஒன்றை மத்திய அரசு தனியார் மயமாக்க போவதாக அறிவித்துள்ளது. இதை கண்டித்தும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்களின் கூட்டுப்போராட்ட குழு அமைப்பாளர் ஜி.ஆனந்த் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடந்தது. மேலும், ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நாடு முழுவதும் 60 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில், 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இதன் காரணமாக, நாடு முழுவதும் ரூ.300 கோடியும், தமிழகத்தில், ரூ.50 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் பாதிக்கப்பட்டன. எனவே தனியார் மயமாக்கும் முடிவை, மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பொதுத்துறையை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து ஐக்கிய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜி.கிருபாகரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து 10 லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தற்போது பொதுக்காப்பீடுத் துறையை பாதுகாப்பதற்காக அதன் ஊழியர்களும், அதிகாரிகளும் நடத்தி வரும் வேலை நிறுத்தத்திற்கு வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் தங்களது முழு ஆதரவை தெரிவித்து உள்ளனர். போராட்டம் வெற்றியடைய காப்பீட்டு ஊழியர்களோடு தோளோடு தோள் நின்று தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.