தாமிரபரணி-வைப்பாறு இணைக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்துவேன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
தாமிரபரணி-வைப்பாறு இணைக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்துவேன் என்று ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.
விருதுநகர்,
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இந்நிலையில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் ராஜபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய பொற்கால ஆட்சி, தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் தொடர வேண்டும். 3- வது முறையாக ஆண்ட கட்சியே மீண்டும் ஆளவேண்டும் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும்.
இந்தியாவை ஆளுகின்ற இரும்பு மனிதர் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மூலமாக வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள் ளது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டா இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்தவர்களுக்கு பட்டா வாங்கி கொடுத்துள்ளேன். விருதுநகர் மாவட்டத்தில் 68ஆயிரம் நபர்களுக்கு முதியோர் பென்சன் வாங்கி கொடுத்துள்ளேன். ராஜபாளையத்தில் உள்ள அனைத்து சாலைகளும் புதிதாக போடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.
கொண்டால்நகரம் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், சத்திபட்டி ரயில்வே மேம்பாலம், தொகுதி முழுவதும் 13 அம்மா மினி கிளினிக் இப்படி பல திட்டப்பணிகளை நான் அமைச்சராக இருந்தபோது ராஜபாளையம் தொகுதியில் செய்து கொடுத்துள்ளேன். ராஜபாளையம் தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 10 ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றி தற்போது வரை பணியாற்றி வருகின்றேன். 15 ஆண்டு காலம் திருத்தங்கல் நகராட்சியில் துணைதலைவராக பணியாற்றியுள்ளேன். 5 முறை இரட்டை இலை சின்னத்தில் நின்று கொண்டு ஐந்து முறையும் வெற்றி பெற்று இருக்கின்றேன். இந்த முறையும் உங்கள் ஒத்துழைப்போடு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவேன். ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் குடிமராமத்து திட்டத்தில் ஏராளமான கண்மாய்கள் குளங்கள் தூர் வாரியதால் கண்மாய் குளங்களில் நீர் நிரம்பி உள்ளது. காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடியார் அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார். அதேபோன்று தாமிரபரணி - வைப்பாறு இணைப்பு திட்டத்தை செய்து கொடுங்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடியாரிடம் நான் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நதிகள் இணைப்பு திட்டம் நிறைவேறினால் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிகள் வளம் பெறும். இந்த திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நம்முடைய அடுத்த அறிவிப்பு இந்த திட்டமாகத் தான் இருக்கும் என்றும் எடப்பாடியார் என்னிடம் கூறினார்.
தாமிரபரணியில் உற்பத்தியாகும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. அதை தடுக்கும் வகையில் தாமிரபரணி வைப்பாறு நதிகள் இணைக்கும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்த உள்ளோம். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் தஞ்சை மண்டலம் போல் விருதுநகர் மாவட்டம் பசுமை சோலையாக மாறும். அழகர் அணை திட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்த திட்டம் கொண்டு வர மத்திய அரசு மற்றும் வனத்துறை ஒப்புதல் பெற வேண்டும். ஏனென்றால் புலிகள் சரணாலயம் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளதால் இது சாத்தியமில்லை. அந்த திட்டம் வர கால தாமதம் ஏற்படும். ஆனால் தாமிரபரணி-வைப்பாறு இணைப்பு திட்டம் விரைவாகக் கொண்டு வரப்படும். விருதுநகர் மாவட்டத்தில் இன்று அனைத்து சாலைகளும் அகலப்படுத்தப்பட்டு போடப்பட்டு வருகின்றது. ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் என்பதற்காக வளர்ச்சித் திட்டப் பணிகளை கிடப்பில் போட வில்லை. புறக்கணிக்கப்படவில்லை மாறாக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். ராஜபாளையத்தில் தங்கிதான் மக்கள் பணியாற்றுவேன். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தமிழகத்தில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற நிலைமையை ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உருவாக்க வேண்டும்.
கூட்டத்தில் ராஜபாளையம் சத்திரபட்டி சமுசிகாபுரம் பகுதியில் இருந்து திமுக வில் இருந்து கிழக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் பாலவிநாயகம், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் சகுந்தலா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். கூட்டத்தில் ராஜபாளையம் அதிமுக நகர செயலாளர் ரானாபாஸ்கரராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் குருசாமி, நவநத்தினம், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் துரைமுருகேசன், சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜபாண்டியன், செட்டியார்பட்டி நகர செயலாளர் அங்குத்துரைபாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராதாகிருஷ்ணன்ராஜா, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக இணைச் செயலர் அழகுராணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல இணைச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் செய்யதுசுல்தான், விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், ஜான்பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.