குமரகிரி அருகே அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
அடிப்படை வசதிகள் செய்த தர வலியுறுத்தி குமரகிரி அருகே சிவன் தெரு மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலை புறக்கணிக்கப்பதாக அவர்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்:
அடிப்படை வசதிகள் செய்த தர வலியுறுத்தி குமரகிரி அருகே சிவன் தெரு மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலை புறக்கணிக்கப்பதாக அவர்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்
தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி ஒரு சில இடங்களில் பொதுமக்கள் வேட்பாளர்களிடம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் குமரகிரி அருகே சிவன் தெரு பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர். மேலும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
கருப்புக்கொடி
எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. எங்கள் பகுதிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். தேர்தல் நேரத்தில் மட்டும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று கூறுகின்றனர். ஆனால் இதுவரை அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.
எனவே அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், வாக்கு சேகரிக்க வ ரும் வேட்பாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.