கடந்த 9 நாட்களில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம்-சேலம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கடந்த 9 நாட்களில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் விதித்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.;

Update: 2021-03-17 23:40 GMT
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு சந்தைக்கு முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்கினார். மேலும், அவர் உழவர் சந்தை மற்றும் சாலையின் இருபுறமும் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி, முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும், சமூக இடைெவளியை கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுரை வழங்கினார்.
மேலும் அவர் கூறும்போது, ‘சேலம் மாநகராட்சியில் கடந்த 9 நாட்களில் முக கவசம் அணியாத 574 பேருக்கு தலா ரூ.200 வீதமும், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 193 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதமும், 3 வணிக நிறுவனத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இந்த முகாமில், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம், சுகாதார அலுவலர் பாலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்