மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து மான் வேட்டையாடிய 4 பேர் கைது
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து மான் வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.;
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் சமயபுரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள 4 பேர் வீடுகளில் மான் இறைச்சி சமைப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனச்சரக அதிகாரி பழனிராஜா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த வீடுகளில் 4 பேர் மான் இறைச்சியை சமைத்து கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனே வனத்துறையினர் 4 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள், சமயபுரத்தை சேர்ந்த நாகலிங்கம் (வயது 64), செல்வராஜ் (52), பழனிசாமி (41), மணி (43) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், 4 பேரும் நெல்லிமலை காப்புக்காடு சமயபுரம் வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து மானை வேட்டையாடியதும் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து மான் இறைச்சி, சுருக்கு கம்பி, வலை ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.