புளியங்குடியில் அரசு பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு
புளியங்குடியில் அரசு பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
புளியங்குடி:
சாத்தூர் சின்னகாமன்பட்டியை சேர்ந்த ராமையா மகன் கருப்பசாமி (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழக சாத்தூர் பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை தென்காசியில் இருந்து கோவில்பட்டி செல்லும் பஸ்சில் கண்டக்டர் முருகேசனுடன் பணியில் இருந்தார். அந்த பஸ் புளியங்குடி வந்தபோது மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் வந்த நபர் மீது பஸ் லேசாக இடித்ததாக கூறப்படுகிறது. டிரைவரும் அதனை கவனிக்காமல் பஸ்சை பஸ் நிலையத்துக்கு ஓட்டி வந்து விட்டார். பின்னர் பயணிகளை இறக்கிவிட்டு பஸ் மீண்டும் கோவில்பட்டிக்கு புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே, மோட்டார் சைக்கிளில் இடித்து விட்டு பஸ் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த அந்த நபர் மோட்டார் சைக்கிளில் பஸ்சை துரத்தி சென்றார். சிந்தாமணி அருகே பஸ்சை மறித்து நிறுத்தி, டிரைவர் கருப்பசாமியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அதை தடுத்ததால் கருப்பசாமிக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த அவரை பயணிகள் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.