சேலத்தில் கூட்டுறவு சங்க பெண் நிர்வாகி கொலையில் 3 பேர் கைது

சேலத்தில் கூட்டுறவு சங்க பெண் நிர்வாகி கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2021-03-17 23:02 GMT
சேலம்:
சேலத்தில் கூட்டுறவு சங்க பெண் நிர்வாகி கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெண் கொலை
சேலம் அம்மாபேட்டை பாலாஜிநகர் முதல் கிராசை சேர்ந்தவர் பாட்சா. இவர் மண்டபம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உமைபானு (வயது 45). இவர் முஸ்லிம் மகளிர் கூட்டுறவு சங்கத்தில் கவுரவ செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உமை பானுவை கை, கால்களை கட்டிப்போட்டு மர்ம நபர்கள் கொலை செய்தனர்.
இந்த கொலை குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. உமைபானுவின் செல்போன் எண் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொலை பணத்தகராறில் நடந்தது தெரியவந்தது.
3 பேர் கைது
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அக்பர் (45), சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த அப்சல் (29) ஆகியோரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் அக்பர், அப்சல், பொன்னம்மாபேட்டையை சேர்ந்த ரகுபதி (29) ஆகியோர் சேர்ந்து உமைபானுவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அக்பர், அப்சல்,ரகுபதி ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
பரபரப்பு தகவல்கள்
இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, கொலை செய்யப்பட்ட உமைபானு பாலக்காடு பகுதியை சேர்ந்த அக்பர் என்பவரிடம் ரூ.40 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அவர், அப்சல் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோருடன் உமைபானு வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் வாங்கிய கடனை திருப்பி கொடுக்குமாறு கேட்டனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் உமைபானுவின் கை, கால்களை கட்டிப்போட்டு கொலை செய்துள்ளனர். பின்னர் அவருடைய உடலை கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டு சென்று விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்