அம்பை அ.தி.மு.க. வேட்பாளர் இசக்கி சுப்பையாவின் சொத்து மதிப்பு ரூ.212 கோடி
அம்பை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இசக்கி சுப்பையாவின் சொத்து மதிப்பு ரூ.212 கோடி என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இசக்கி சுப்பையா, சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதீக் தயாளிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியல் கொடுத்து உள்ளார்.
அதில், இசக்கி சுப்பையா பெயரில் அசையா சொத்து ரூ.208¾ கோடியும், அவரது மனைவி மீனாட்சி பெயரில் ரூ.30 கோடியும் உள்ளது. மேலும் இசக்கி சுப்பையா பெயரில் ரூ.3¾ கோடி அசையும் சொத்தும், அவரது மனைவி பெயரில் ரூ.3 கோடி அசையும் சொத்தும் உள்ளது. இசக்கி சுப்பையா பெயரில் மட்டும் மொத்தம் ரூ.212½ கோடி அசையும், அசையா சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கடனாக ரூ.4½ கோடியும், அவரது மனைவி பெயரில் ரூ.65 லட்சமும் உள்ளது. கையிருப்பு தொகையாக இசக்கி சுப்பையாவிடம் ரூ.54 ஆயிரமும், அவரது மனைவியிடம் ரூ.49 ஆயிரமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.