மாட்டு வண்டியில் சென்று வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் வழங்கிய கலெக்டர்

வத்திராயிருப்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலி யுறுத்தி மாட்டு வண்டியில் சென்று வாக்காளர்களுக்கு கலெக்டர் கண்ணன் அழைப்பிதழ் வழங்கினார்.;

Update: 2021-03-17 21:29 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலி
யுறுத்தி மாட்டு வண்டியில் சென்று வாக்காளர்களுக்கு கலெக்டர் கண்ணன் அழைப்பிதழ் வழங்கினார். 
விழிப்புணர்வு நிகழ்ச்சி 
சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டுவதற்காக  நாள்தோறும் வாக்களார்களை கவரும் வகையில் அரசுத்துறை மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு புதிய பஸ் ஸ்டாண்டில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி அடங்கிய பதாதைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
வாக்குப்பதிவு எந்திரம் 
வருகிற தேர்தலில் வாக்காளர்கள் குழப்பமின்றி தெளிவாக வாக்களிக்கும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
தேர்தல் விழிப்புணர்வு வரைபட காட்சி மையத்தை கலெக்டர் கண்ணன் திறந்து வைத்து, வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக மகளிர் சுய உதவிக்குழுவினரால் வரையப்பட்ட வரைபடங்களை பார்வையிட்டார். 
மாட்டு வண்டி 
தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு மனிதவள விளம்பர மையத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார். 
மகளிர் சுய உதவிக்குழுவை சார்ந்த பெண்கள் தேர்தல் ராக்கியை அணிவித்தனர். 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஓவியங்களை மெகந்தி மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் கைகளில் வரைந்து வாக்களார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
மகளிர் திட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுவண்டி பேரணியை தொடங்கி வைத்து 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி மாட்டுவண்டியில் சென்று வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து, தவறாமல் வாக்களிக்க வருமாறு வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் வழங்கினார். 
கலை நிகழ்ச்சி 
இதையடுத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் தனபதி, உதவி திட்ட அலுவலர்கள் கிஷோர், வசுமதி, வளர்மதி, ஜெயராம், சுந்தரமூர்த்தி, பொன்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசி, சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கண்ணன், சிவாஅருணாசலம், அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்