மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை,
மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீரின்றி அவதி
மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் வினியோகம் செய்தாலும், போதுமான அளவு வினியோகிப்பதில்லை.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே குடிநீர் பிரச்சினை தலைதூக்கத்தொடங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை மணப்பாறை-விராலிமலை சாலையில் அண்ணா நகர் அருகே காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது, குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.