அந்தியூரில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த தலைமை ஆசிரியை மீட்பு கர்நாடகத்தை சேர்ந்தவர்

மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த கர்நாடகத்தை சேர்ந்த தலைமை ஆசிரியை அந்தியூரில் மீட்கப்பட்டார்.

Update: 2021-03-17 20:51 GMT
மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த கர்நாடகத்தை சேர்ந்த தலைமை ஆசிரியை அந்தியூரில் மீட்கப்பட்டார்.
மனநிலை பாதிப்பு
மனநிலை பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை பகுதியில் சுற்றித்திரிவதாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தன்னார்வ தொண்டு அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்தியூர் வந்து விசாரித்தனர்.
அதில் அந்த பெண்  கடந்த 4 ஆண்டுகளாக அந்தியூர் பகுதியில் சுற்றித்திரிந்ததும், அங்குள்ள டீக்கடை மற்றும் ஓட்டல்களில் டீ வாங்கியும், சாப்பாடு வாங்கியும் சாப்பிட்டுவிட்டு, இரவு நேரத்தில் ஒரு மரத்தடியில் படுத்து தூங்குவார் என்பதும் தெரிய வந்தது.
தலைமை ஆசிரியை
மேலும் அந்த பெண், கர்நாடக மாநிலத்தை கிரிஜா என்பதும், எம்.ஏ., பி.எட் படித்துள்ள அவர் கர்நாடகத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததும், இந்த நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டதால் உறவினர்கள் அவரை அந்தியூர் பகுதியில் கொண்டு் சென்று விட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து தொண்டு நிறுவனத்தினர் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அவரை குளிக்க வைத்து, கை, கால் நகங்களையும், முடியையும் அழகாக வெட்டிவிட்டனர். மேலும் புத்தாடைகள் வாங்கி அவர் உடுக்கவும் கொடுத்தனர்.  பின்னர் அவரை விழுப்புரத்தில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

மேலும் செய்திகள்