விருத்தாசலத்தில் துணிகரம் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

22 பவுன் நகை கொள்ளை

Update: 2021-03-17 20:36 GMT
விருத்தாசலம், 
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியகண்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் கோபிநாத் மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்று விட்டார். கோபிநாத் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோ பூட்டை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

நேற்று காலை கோபிநாத் மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. 
இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நள்ளிரவில் சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்