களக்காடு அருகே மேலும் 2 ஆடுகளை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி
களக்காடு அருகே மேலும் 2 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மேலகாலனி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். 65 வயது மூதாட்டியான இவரது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்குள் கடந்த 15-ந் தேதி இரவில் புகுந்த சிறுத்தைப்புலி 3 ஆடுகளை அடித்துக் கொன்றது. ஒரு ஆட்டை கடித்து விட்டு தப்பிச் சென்று விட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று அப்பகுதியில் பதிந்திருந்த சிறுத்தைப்புலியின் கால்தடங்களை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மீண்டும் சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. சிதம்பரபுரம் முத்துநகர் காலனியை சேர்ந்த சுப்பையா மனைவி மாரியம்மாள் (57) வீட்டில் புகுந்த சிறுத்தைப்புலி, அங்கு கட்டி போட்டிருந்த 2 ஆடுகளை கடித்துக் கொன்றது. நேற்று காலையில் சிறுத்தைப்புலி கடித்து ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு மாரியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். சிறுத்தைப்புலி புகுந்த பகுதி குடியிருப்புகள் சூழ்ந்த பகுதி ஆகும். எனவே அப்பகுதி பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அங்கு பதிந்திருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர். ஊருக்குள் நடமாடும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும், சிறுத்தைப்புலி கடித்து கொன்ற ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.