டயர் வெடித்து கார் கவிழ்ந்தது; ஒருவர் பலி

சேத்தூர் அருகே டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-03-17 20:11 GMT
தளவாய்புரம், 
சேத்தூர் அருகே டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். 
கார் கவிழ்ந்தது 
திண்டுக்கல் பகுதியை சேர்ந்த முத்துவேல் (வயது 70) என்பவர் நேற்று காலை தனது காரில் குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். 
அந்த காரை செந்தில்குமார் (43) என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று காலை அந்த கார் ராஜபாளையம் - தென்காசி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள மேலூர் துரைச்சாமிபுரம் விளக்கில் திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து கார் கவிழ்ந்தது. 
5 பேர் படுகாயம் 
இதில் காரில் பயணம் செய்த முத்துவேல், உஷாராணி (55), தீனதயாளன் (38), செல்வி (35), நித்யஸ்ரீ (18) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். 
இதுகுறித்து சேத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் படுகாயமடைந்த 5 பேரை ஆம்புலன்சில் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
போலீசார் விசாரணை 
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முத்துவேல் பரிதாபமாக உயிரிழந்தார். 
இதில் படுகாயமடைந்த 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்