நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
ரெகுநாதபுரத்தில் நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி
நெல்கொள்முதல் நிலையம்
கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்துவந்தனர். கடந்த 40 நாட்களுக்கு முன்பு சாக்கு இல்லை என கூறி நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தபட்டது. இருப்பினும் சாக்கு வரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தினமும் அறுவடை செய்த நெல்லை கொள்முதல்நிலையத்திற்கு கொண்டுவந்து குவியலாக்கி காத்திருந்தனர்.
ஆனால் நெல்கொள்முதல் நிலையத்தில் இன்று, நாளை ெநல்கொள்முதல் என காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில். அங்கு பணியாற்றிய ஊழியர்களும் விடுமுறை எடுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று ரெகுநாதபுரத்தில் கறம்பக்குடி-தஞ்சாவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ரவிக்குமார் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் 40 நாட்களுக்கு மேலாக கொள்முதல்நிலையத்திலேயே இரவு-பகலாக காத்திருப்பதாகவும், நெல் குவியல்கள் வீணாவதாகவும் கூறி கண்ணீர் வடித்தனர்.
விவசாயிகளை சமாதானபடுத்திய அதிகாரிகள் 2 நாட்களில் சாக்குகள் வரவழைத்து நெல் கொள்முதல் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.