நாமக்கல்லில் பட்டப்பகலில் துணிகரம்: நகை பட்டறை அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
நாமக்கல்லில் பட்டப்பகலில் துணிகரம்: நகை பட்டறை அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
நாமக்கல்:
நாமக்கல்லில் நகை பட்டறை அதிபர் வீட்டில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை பட்டறை அதிபர்
நாமக்கல் சந்தைபேட்டை புதூரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). இவர் நாமக்கல்லில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி கோமதியுடன் வெளியூர் சென்று விட்டார்.
மாலையில் பால் போட வந்த நபர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.
10 பவுன் நகை திருட்டு
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அருண்குமார் வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
========