வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி

Update: 2021-03-17 19:11 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 816 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 3,936 வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் தொகுதிக்கு பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியிலும், குன்னம் தொகுதிக்கு மேலமாத்தூர் ராஜ விக்னேஷ் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி வகுப்பினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடத்தினர். இப்பயிற்சியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து செயல்முறை விளக்கம் மற்றும் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வாக்குச்சாவடி அலுவலர்களிடமிருந்து தபால் வாக்குகளுக்கான படிவங்களை பூர்த்தி செய்வது குறித்தும், வாக்குச்சாவடி மையங்களில் எவ்வாறு கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இதில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை-1 அலுவலர்களுக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி நிலை-2, 3 அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடந்தது. பெரம்பலூரில் நடந்த பயிற்சி வகுப்பினை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டார். மேலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், நிலை அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 27-ந் தேதியும், 2-ம் கட்ட மறுபயிற்சி வகுப்பு ஏப்ரல் 2-ந் தேதியும், 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு ஏப்ரல் 5-ந் தேதியும் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்