சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. முககவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
பாதிப்பு அதிகரிப்பு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தை ஒட்டிய மாநிலங்களிலும், தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும் சமீப காலமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுமக்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்ற நிலை நீடிக்கிறது. பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் அலட்சிய போக்குடன் நடந்து கொள்வது கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதை தடுக்கும் விதமாக, கொரோனா வழிகாட்டுதலை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் உயர் அலுவலர்களும், காவல் துறையில் உதவி ஆய்வாளர் மற்றும் உயர் அலுவலர்களும், உள்ளாட்சி துறையில் துப்புரவு ஆய்வாளர் மற்றும் உயர் அலுவலர்களும், சுகாதாரத் துறையில் சுகாதார ஆய்வாளர் மற்றும் உயர் அலுவலர்களும் அபராதம் விதிக்க அரசினால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் ரூ.200-ம், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ.500-ம், அரசினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வழிகாட்டுதல் மீறினால் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்படும்.
அபராதம்
அரசின் வழிகாட்டு நெறிகளை கடைபிடிக்காமல் இருக்கும் நிறுவனங்களுக்கு ரூ.5000 மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிகளை மீறினால் ரூ.5000 சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலை ஏற்று கொரோனா பரவுவதை தடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மீறினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் இருந்ததற்கு ரூ.4 லட்சத்து 41 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா நோய் குறித்து பொது சுகாதாரத்துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பொதுமக்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முக கவசம் அணிந்து தான் வெளியில் செல்வது போன்ற நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.