கரூர் மாவட்டத்தில் 85 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
கரூர் மாவட்டத்தில் 85 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
கரூர்
பதற்றமான வாக்குச்சாவடிகள்
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் வாக்குச்சாவடிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி.தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளி, மாவடியான்கோவில் தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளி, கோட்டைமேடு உயர்நிலைப்பள்ளி, திருக்காம்புலியூர் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி மற்றும் மண்மங்கலம் வட்டத்தை சேர்ந்த பெரியவடுகபட்டி, மண்மங்கலம், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொதுவாக தேர்தலின்போது ஏதேனும் பிரச்சினை வர வாய்ப்புள்ளதாக கருதப்படும் அல்லது ஏற்கனவே நடந்த தேர்தல்களில் பிரச்சினை நடந்துள்ள வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 90 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடந்து அதில் 75 சதவீதம் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்காக பதிவாகியிருப்பின் அந்த வாக்குச்சாவடிகள் கிரிட்டிகல் வாக்குச்சாவடிகள் என்றும் கருதப்படுகின்றது.
85 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
அந்த வகையில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள 1,274 வாக்குச்சாவடி மையங்களில், 85 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 9 வாக்குச்சாவடி மையங்கள் கிரிட்டிகல் வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான மற்றும் கிரிட்டிகல் வாக்குச்சாவடிகளும் சேர்த்து 50 சதவீத வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக கரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கரூர் நகராட்சி திருமண மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.