விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரத்தில் இருந்த நிலையில் அக்கட்சியின் நிர்வாகி வேட்பு மனு தாக்கல்

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரத்தில் இருந்த நிலையில் அக்கட்சியின் நிர்வாகி வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-03-17 17:36 GMT
விருத்தாசலம், 

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதி தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். 

இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.  இந்நிலையில் விருத்தாசலம் பகுதியில் கடந்த சில தினங்களாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாநில செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் என்ற பதிவு வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.

குழப்பம்

இந்த நிலையில் நேற்று காலை காங்கிரஸ் துண்டு, கொடியுடன் கட்சியின்  மாநில செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் தனது ஆதரவாளர்களுடன், பேரணியாக விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான பிரவீன்குமாரிடம் மனு தாக்கல் செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நீதிராஜனா? அல்லது ராதாகிருஷ்ணனா? என்ற குழப்பம் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கை

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் 25 ஆண்டுகளாக இருக்கும் நான், தற்போது மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். நான் தலைமையிடம் சென்று விருப்ப மனு தாக்கல் செய்து நேர்காணலில் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னை வேட்பாளராக அறிவிப்பதாக உத்தரவாதம் கொடுத்திருந்தனர். ஆனால் இன்று நல்ல நாள் என்பதால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக மனு தாக்கல் செய்துள்ளேன். கூட்டணி கட்சி ஆதரவோடு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த முறை எனக்கு வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக வெற்றிக்கனியை பறித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பேன். எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
 
பரபரப்பு

காங்கிரஸ் தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யாமல், மாநில செயற்குழு உறுப்பினர் வேட்பு மனு தாக்கல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்