பூ வியாபாரி பலி
கொடைரோடு அருகே பள்ளத்தில் தலைகுப்புற கார் கவிழ்ந்து பூ வியாபாரி பலியானார்.
கொடைரோடு:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 50). பூ வியாபாரி.
நேற்று இவர், தனது உறவினர்கள் 2 பேருடன் ஒரு காரில் மானாமதுரையில் இருந்து திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.
காரை வன்னீஸ்வரன் (42) என்பவர் ஓட்டினார். அவர்கள் வந்த கார், கொடைரோடு அருகே உள்ள நக்கம்பட்டி மேம்பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக காரின் பின் டயர் திடீரென்று வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாைலயோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கார் டிரைவர் வன்னீஸ்வரன், பாண்டியின் உறவினர்கள் பாலகிருஷ்ணன் (45), ராஜம்மாள் (70) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விைரந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்த பாண்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.