அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி

கொரோனா பரவலை தடுக்க, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-03-17 17:28 GMT
கடலூா்,

கொரோனா நோய் உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா நோய்த்தொற்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்று 2-ம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது.

இதை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், தடுப்பூசிகளை வழங்கியும் வருகிறது. மேலும், பொதுமக்கள் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முக கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல், கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கி மக்களை பாதுகாத்து வருகிறது.

அபராதம்

இந்நிலையில் நோய்த்தொற்று தீவிரமாக பரவி வருவதை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவற்றை பின்பற்ற தவறும் பட்சத்தில் பொதுமக்களுக்கு, தமிழ்நாடு பொது சுகாதாரச்சட்டத்தின் கீழ் அரசு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது.
ஆகவே பொது இடங்களில் முக கவசம் அணிய தவறும் பொதுமக்களுக்கு ரூ.200-ம், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500-ம் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடிக்க தவறும் நபர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

ரூ.5 ஆயிரம்

வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடங்களுக்கு வரும் பொதுமக்கள், முக கவசம் அணியாத பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதிக மக்கள் கூடும் இடங்களான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களைச் சேர்ந்த உரிமையாளர்களும், கொரோனா நோய்த்தொற்று நோயில் இருந்து தங்களது பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க முழுமையாக கடமைப்பட்டுள்ளார்கள். மேலும்,   பொதுமக்கள் ஒவ்வொருவரும் கொரோனா நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மேற்கண்ட தகவலை கடலூா் மாவட்ட கலெக்டா் சந்திரசேகா் சாகமூாி தொிவித்துள்ளாா். 

மேலும் செய்திகள்