தி.மு.க.வினர் இடையே கோஷ்டி மோதல்; 2 பேருக்கு அரிவாள் வெட்டு
முதுகுளத்தூரில் வேட்புமனு தாக்கலின் போது தி.மு.க.வினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.;
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூரில் வேட்புமனு தாக்கலின் போது தி.மு.க.வினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மோதல்-அரிவாள் வெட்டு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பன் நேற்று பகல் 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை வரவேற்க தி.மு.க.வினர் திரண்டு இருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக தேரிருவேலி முக்குரோட்டில் தி.மு.க.வினர் இருதரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். கல்வீச்சு நடந்தது.
இந்த மோதலில் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், முத்துக்குமார் ஆகிய 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அந்த பகுதி களேபரமானது.
வழக்குப்பதிவு
அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து, காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.