நெய்வேலி வில்லுடையான்பட்டு சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ரத்து
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெய்வேலி வில்லுடையான்பட்டு சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெய்வேலி,
நெய்வேலியில் பிரசித்தி பெற்ற வில்லுடையான்பட்டு சிவசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு இக்கோவிலை நிர்வகித்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும், பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு உற்சவ நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் கொண்டாட ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை வழங்கிய அறிவுறுத்தலின்படியும், பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டும், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் வருகிற 28-ந்தேதி நடைபெற இருந்த பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்படுகிறது.
ஒத்துழைப்பு
இதுகுறித்து என்.எல்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற 28-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவின்போது, வழக்கமான நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது, ஆனால் பொது தரிசனத்திற்கு மட்டும், குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்கள் முக கவசம் அணிந்து கைகளை சுத்தப்படுத்திய பின்னர், சமூக இடைவெளியை கடைபிடித்து அனுமதிக்கப்படுவார்கள். எனவே பங்குனி உத்திர திருவிழாவிற்கு வர விரும்பும் பக்தர்கள் தங்கள் வருகையை தவிர்த்து சமூக நலன் கருதி கோவில் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.