3 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தினமும் 5-க்கும் கீழ் கொரோனா உறுதியாகி வந்தது. தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், அங்கு இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி இருப்பவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாமாக முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 58 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.