தூத்துக்குடி மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடம் 12 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Update: 2021-03-17 12:35 GMT
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
பயிற்சி வகுப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றக்கூடிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, விளாத்திகுளம் தொகுதிக்கு எட்டயபுரம் சிகேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் தொகுதிக்கு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு புதியம்புத்தூர் ஜான் தி பாப்திஸ்து பள்ளி, கோவில்பட்டி தொகுதிக்கு நாடார் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி  அளிக்கப்பட்டது.
எட்டயபுரம் சி.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மையங்களில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் ஆணைய விதிமுறைகள் குறித்து விளக்கினார்.
கலந்துகொண்டவர்கள்
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், நேர்முக உதவியாளர் முருகானந்தம், வட்டாட்சியர்கள் ரகுபதி, அய்யப்பன், அமுதா, ராஜ்குமார், பேச்சிமுத்து, மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதற்கட்ட பயிற்சி
 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 2 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பணியாற்ற உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு மையத்தை தேர்வு செய்து பயிற்சி வழங்கப்படுகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மண்டல அலுவலர்கள், வட்டார வள பயிற்றுநர்கள் பயிற்சி வழங்குகின்றனர். தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது போல் ஒவ்வொரு வகுப்புக்கும் 40 பேர் அமர வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
மாவட்டம் முழுவதும் 293 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பில் துணை ராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தனி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டு, வாக்களிக்க வருபவர்களை யாரும் தடுக்கக்கூடாது என்பது உறுதி செய்யப்படும். 
விழிப்புணர்வுக்குழு
2 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நேரு யுவகேந்திரா, சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்ற தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுபானம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சதவீதம் 0.36 அளவில் தான் உள்ளது. இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தினமும் கொரோனா பாதித்த நபர்கள் எந்த ஊரில் உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதணை செய்யப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு இதுவரை ரூ.23 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று தினம் மட்டும் ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத நடவடிக்கை கண்டிப்பாக தொடரும். அதே போல், தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியவில்லை என்றால், அந்த கூட்டங்களை நடத்துபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
தபால் வாக்குகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு இ.டி.பி.பி.எஸ். மூலமாகவும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பின்போதும் படிவம் 12 வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் படிவம் 12டி மூலம் வாக்களிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்