திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் தி.மு.கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அறிமுகம்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் தி.மு.கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளராக இனிகோ இருதயராஜ் அறிமுகம் செய்யபட்டார்.

Update: 2021-03-17 10:15 GMT
திருச்சி, 

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணியில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 
இதில் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜை அறிமுகம் செய்து வைத்து கே.என்.நேரு பேசும்போது கூறியதாவது:-

1977-ல் எம்.ஜி.ஆர். முழுமையாக வெற்றி பெற்ற போதும் கிழக்கு தொகுதியில் தி.மு.க. தான் வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணாவும், கலைஞரும் இங்கு வந்து தங்கி பணியாற்றியவர்கள். இன்னும் அநேக தலைவர்கள் இந்த கிழக்கு தொகுதியில் தங்கி பணியாற்றி இருக்கிறார்கள். இந்த இடம் படித்தவர்களுக்கான இடம் இல்லை. எங்களைப் போன்ற படிக்காதவர்கள் இருக்க வேண்டிய இடம். எனவே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மட்டும் தான் சொல்ல முடியும்.  

10 ஆண்டுக்கு முன்பு ஆட்சியில் இருந்த கலைஞர் மாதம் ஒரு முறை திருச்சிக்கு வருகை தந்து 50 திட்டங்களை துவக்கி வைத்திருக்கிறார். கூட்டுக்குடிநீர் திட்டத்தை மிக சிறப்பாக துவங்கி வைத்த வரும் கலைஞர் தான். அன்பில் மகேஷ்பொய்யாமொழி வெற்றி பெற்றவுடன் ஒரு நல்ல பொறுப்பிற்கு வருவார். 

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தி.மு.க. ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றும், அ.தி.மு.க. அரசினால் அறிவிக்கப்பட்ட இலவசங்கள் என்பது அவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க மாட்டார்கள் என்பது தெரிந்து இலவசங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே மக்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு தந்தால் நாங்களும் எங்களுடைய திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்துவோம், என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்