திருவள்ளூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை, மகன், மகள் சாவு டிரைவர் கைது

திருவள்ளூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை, மகன், மகள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-03-17 07:30 GMT
திருவள்ளூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் மாரிமங்கலத்தை அடுத்த பட்டமுடையார் குப்பத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 35). காய்கறி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா (வயது 30). மகள் தனுஜாஸ்ரீ (6), மகன் தருண் (3). நேற்று ஜெகதீஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவள்ளூரை அடுத்த ஈக்காடு அருகே உள்ள வீரராகவபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஜெகதீஷ், தருண், தனுஜாஸ்ரீ ஆகியோர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 அடி தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். இந்த விபத்தில் சங்கீதா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காயம் அடைந்த சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன், திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ஜெகதீஷ், தருண், தனுஜாஸ்ரீ ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஜெகதீசின் உறவினர் பிரபு திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் அருகே உள்ள கொட்டமேடு கொசவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த சத்யா (வயது 37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்