100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அழைப்பிதழ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களிடையே நடத்தி வருகிறார்.;
திருவள்ளூர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களிடையே நடத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருவள்ளூர் பெரியகுப்பம் வள்ளலார் தெருவில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ் மற்றும் தாம்பூலத்தை பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா பொதுமக்களிடம் நேரடியாக வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பின்னர் அவர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அவருடன் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.